Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா 2024!!

சவூதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா 2024!!

195
0

ரியாத்: சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர் கலை விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது.

ரியாத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் தமிழ் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகக் கல்வி, விளையாட்டு, (கலை) தனித்திறன் போன்ற சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிப்பது வழக்கம். அந்த வரிசையில் இவ்வருடமும் ரியாத்தில் உள்ள 9 இந்திய பன்னாட்டுப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவ/மாணவிகள் பெருவாரியாகப் பங்கு கொண்ட மாணவர் கலைவிழா 2024 நிகழ்ச்சி, 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில், வெகுவிமர்சையாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலையிலும், இலங்கைத் தூதர் தலைமையிலும், இந்திய பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பல பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வழக்கமான பேச்சு, இசை, நடனம், நடிப்பு மட்டுமின்றி, பாவனை நாடகம் (Mimes) குறும்படம் மற்றும் டிஜிட்டல் கலைகள் போன்ற புதுமையான திறமைகளையும் அரங்கேற்றிக் கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.

இக்கலை விழா தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடுபற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்த்தது என்றால் அது மிகை அல்ல. இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இது போன்ற நிகழ்ச்சிகள் தங்களது குழந்தைகளின் திறமைகளை வெளிகாட்ட உதவுவதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வருடம் படிப்பு, தமிழ் மொழித்திறன், விளையாட்டு, மற்றும் தனித்திறமைகளில் சாதனை படைத்த மாணவர்களையும், சிறப்பாகச் சேவையாற்றி வரும் தமிழாசிரியர்களையும் கெளரவித்து விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வெற்றிவேல், சிறப்பு விருந்தினர் மேதகு திரு. பி.எம். அம்ஸா, விழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு. இம்தியாஸ், திரு. மதி சிறப்புரை வழங்கியதுடன் வருங்கால தலைமுறை தமிழ், தமிழர் நலன், கல்வி, கலைத்திறமையில் சிறந்து விளங்க வேண்டும் அது வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

பெருவாரியாக, தமிழ் நெஞ்சங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஷமீம் அவர்களின் நன்றியுரை, அதனைத் தொடர்ந்து நாட்டுப்பண்ணுடன் இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!