மத்திய கிழக்கில் மிகப்பெரிய காற்றாலை ஆற்றல் உற்பத்தித் திட்டத்துக்காகச் சவூதி அரேபிய நிறுவனமான ACWA Power தலைமையிலான கூட்டமைப்புடன் எகிப்திய அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பூலி மற்றும் எகிப்துக்கான சவூதி துணை தூதர் அப்துல்ரஹ்மான் பின் சலேம் அல்-தஹாஸ் ஆகியோர் கையெழுத்திடும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம் $1.5 பில்லியன் வரையிலான முதலீடுகளுடன், சூயஸ் வளைகுடா மற்றும் ஜெபல் எல்-ஜெயிட் பகுதிகளில் 1.1 ஜிகாவாட் திறன் கொண்டதாக நிறுவப்படும். இத்திட்டம் ஆண்டுக்கு 2.4 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கும், ஆண்டுக்குச் சுமார் 840,000 டன் எரிபொருளைச் சேமிக்கும் மற்றும் எகிப்தில் 1 மில்லியன் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எகிப்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சர் டாக்டர். மொஹமட் ஷேக்கர் கூறினார்.
சுமார் 220 மீட்டர் உயரம் கொண்ட பிளேட் உயரத்தையும், சூயஸ் வளைகுடா பகுதியில் மிக உயரமாகவும் இருக்கும் இந்தத் திட்டம் அதிநவீன காற்றாலை விசையாழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று ACWA பவர் தலைமை முதலீட்டு அதிகாரி தாமஸ் ப்ரோஸ்ட்ரோம் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் எகிப்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆணையத்தின் செயல் தலைவர் டாக்டர் முகமது எல் கயாத், ஆப்பிரிக்காவில் வணிக மேம்பாட்டுக்கான ACWA பவரின் துணைத் தலைவர் முகமது ஹம்டூச், ACWA பவரின் எகிப்து நாட்டு இயக்குநர் ஹசன் அமீன் மற்றும் எகிப்தின் ஹசன் அல்லாம் யூட்டிலிட்டிஸ் CEO டாலியா வஹ்பா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





