சவூதி அரேபியாவின் எண்ணெய் அல்லாத துறை 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சரிவு இருந்தபோதிலும், மூன்றாம் காலாண்டில் 3.6 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்டுள்ளது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் சவூதியின் எண்ணெய் அல்லாத நடவடிக்கைகள் 0.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது, அரசாங்க நடவடிக்கைகளின் வளர்ச்சி 1.9 சதவீதமாக உள்ளது.
பருவகாலமாகச் சரிசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது காலாண்டில் 3.9 சதவிகிதமும், எண்ணெய் நடவடிக்கைகளில் 8.4 சதவிகிதமும், அரசாங்க நடவடிக்கைகளில் 5.3 சதவிகிதம் குறைந்துள்ளது.
சவூதி நிதி அமைச்சகத்தின் சமீபத்திய கணிப்புகள், 2024 பட்ஜெட்டின் ஆரம்ப அறிக்கையில், நடப்பு ஆண்டில் எண்ணெய் அல்லாத நடவடிக்கைகள் 5.9 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளரும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், கடந்த செப்டம்பரில் அமெரிக்க ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், சவூதி பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை அடைந்தது என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் அல்லாத துறையின் பங்களிப்பின் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார்.





