சவூதியில் தங்கியிருக்கும் பல்வேறு வகையான விசிட் விசாக்களை வைத்திருப்பவர்கள், விசா விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கி அதன் செல்லுபடியை காலாவதியாகும் ஏழு நாட்களுக்கு முன்னதாக மின்னணு முறையில் நீட்டிக்குமாறு பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் விசாக்களை மின்னணு சேவை தளங்களான அப்ஷர் அஃப்ராட் (தனிநபர்கள்) மற்றும் அப்ஷர் அமல் (வணிகம்) மூலமாகவும், முகீம் எலக்ட்ரானிக் போர்ட்டல் மூலமாகவும் புதுப்பிக்கலாம் என்றும் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
விசாவை நீட்டிக்கச் சரியான மருத்துவக் காப்பீடுடன் பயனாளி தனது கணக்கை அப்ஷரில் பதிவு செய்து, விசா நீட்டிப்புக்கான சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.வருகை விசாவின் மொத்த நீட்டிப்பு காலம் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், மேலும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விசா நீட்டிப்பு முடிக்கப்படும் என்று இயக்குனரகம் தெளிவுப்படுத்தியது.
இந்தச் சேவையைப் பயன்படுத்துவதில் பயனாளிகள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால், அப்ஷர் தளத்தின் தகவல் தொடர்புச் சேவை மூலம் ஜவாசத்துக்கு கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம், அவை இயக்குநரகத்தில் உள்ள சிறப்புக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கையின் நிலையைக் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் என்று இயக்குனரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





