2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சவூதிகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. தனியார் துறையில் பணிபுரியும் சவூதி குடிமக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த வளர்ச்சிக்குச் சவூதியின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் காரணமாக இருக்கலாம்.
தேசிய தொழிலாளர் கண்காணிப்பகம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான அதன் சவூதிமயமாக்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஆண் ஊழியர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனை எட்டியது, அதே நேரத்தில் சுமார் 900,000 பெண் ஊழியர்கள் இருந்தனர், இதன் விளைவாக மொத்த சவூதிமயமாக்கல் விகிதம் 22.3% ஆக உள்ளது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், கிழக்கு மாகாணத்தில் சவூதிமயமாக்கல் விகிதம் 27% ஆகவும், மக்காவில் 24% ஆகவும், அதைத் தொடர்ந்து ரியாத் மற்றும் அல்-மதீனா நகரங்களில் 21% ஆகவும் பதிவாகியுள்ளன. தகவல் தொடர்புத் துறையில் ஆண் குடிமக்களின் பங்கேற்பு விகிதம் 60% ஆகவும், கல்வித் துறையில் பெண் குடிமக்களின் பங்கேற்பு விகிதம் 53% ஆகவும் உள்ளது.
2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய தொழிலாளர் கண்காணிப்பகத்தின் சவூதிமயமாக்கல் அறிக்கையைக் காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இது ஆண்டு முழுவதும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுகிறது.





