மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழு, எட்டு நிமிடங்களுக்கு இதயம் நின்று போன இந்தோனேசிய பெண் யாத்ரீகரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
விமான நிலைய ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியதும் ஹஜ் யாத்ரீகர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக மதீனா சுகாதார ஆணையம் கூறியதாவது, விமான நிலையத்தின் சுகாதார கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மருத்துவக் குழுவிற்கு ஒரு ஹஜ் யாத்ரீகர் தனது விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததாக அவசர அழைப்பு வந்தது.விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழு விரைவாகச் செயற்பட்டு, யாத்ரீகரின் இதய துடிப்பு நின்று விட்டது என்பதைக் கண்டறிந்தனர், மேலும் அவர்கள் உடனடியாக CPR முறையை இரண்டு முறை செய்யத் தொடங்கி ,அவரது இதயத் துடிப்பை மீட்டெடுத்தனர். மேலும் அந்த யாத்ரீகர் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளது .
நடப்பு வருடாந்திர ஹஜ் யாத்திரைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்து விமான நிலையத்தில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாட்டு நிலைய பிரதான மையம் மற்றும் விமான நிலையத்திற்குள் உள்ள தற்காலிக சுகாதாரப் பிரிவுகள் ஊடாக 90,104 யாத்ரீகர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த மையம் வழங்கிய அவசர உதவி சேவைகளால் மொத்தம் 87,857 யாத்ரீகர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.