சவூதி அரேபியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களையும் கல்வியாளர்களையும் ஈர்ப்பதற்காகக் கல்வி அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஒரு புதிய கல்வி விசா திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
ரியாத்தில் நிறைவடைந்த இரண்டு நாள் மனித திறன் முன்முயற்சி மாநாடு கல்வி அமைச்சர் யூசுப் அல்-பென்யான் முன்னிலையில் மனித திறன் மேம்பாட்டுத் திட்டக் குழுவின் தலைவரான பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்றது.
சவூதி பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு “சவூதி அரேபியாவில் படிப்பு” தளத்தின் மூலம் கல்வி விசா வழங்கப்படடும், இந்தச் சேவையானது சவூதி அரேபியாவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதோடு கல்வி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தளம் சர்வதேச மாணவர்கள் சவுதி பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எளிதாகவும் எளிமையாகவும் சமர்ப்பிக்கவும், குறுகிய கால மற்றும் நீண்ட கால கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை நவீன கல்விச் சூழலுக்குள் வழங்க உதவுகிறது.
மனித திறன் முன்முயற்சி மாநாட்டில் “கல்வியில் ஒளி வீசுதல்” என்ற தலைப்பிலான உரையாடல் அமர்வில் மனித திறன்களை வளர்ப்பதற்கான கூட்டு உலகளாவிய அணுகுமுறை கல்வித் துறையில் எதிர்கால சவால்கள் மற்றும் முன்னேற்றங்களை எதிர்கொள்ள உதவும் என்று கல்வி அமைச்சர் அல்-பென்யன் கூறினார்.
2019 இல் ஆரம்பக் கல்வியில் சிறந்த நிலையை அடைந்து 10 சதவீதத்தையும், தற்போது 34 சதவீதத்தையும் கல்வி அமைச்சகம் எட்டியுள்ளதாகவும், 2030ல் 90 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.