2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிற்கு சுமார் 27 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாக, ரியாத்தில் பொது முதலீட்டு நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது முதலீட்டு நிதி மற்றும் தனியார் துறை மன்றத்தின் இரண்டாவது பதிப்பில் உரையாற்றிய சவூதியின் சுற்றுலா அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் கூறினார்.
சுற்றுலா வளர்ச்சி நிதியம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 35 பில்லியன் ரியால்கள் பெறுமதியான நிதியை வழங்கியுள்ளது. 75,000 ஹோட்டல் அறைகளை அமைக்கத் தனியார் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 280,000 ஹோட்டல் அறைகள் உள்ளதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் 550,000 ஹோட்டல் அறைகளை அடைவதே இலக்கு என்றும் அமைச்சர் கூறினார்.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 156 சதவீதமாக உள்ளது என்று அமைச்சர் எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தத் துறை 4.5% மற்றும் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களித்தது.
முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நுழைவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். புதிய சுற்றுலா விதிமுறைகள் வெளியிடப்பட்ட பிறகு, நாங்கள் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பிரச்சாரங்களைச் செயல்படுத்தத் தொடங்கி, கடந்த ஆண்டு 250 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை மூடியுள்ளோம் என்றார்.





