சவுதி பொதுப் பாதுகாப்பு ஆணையம் வருகை விசா வைத்திருப்பவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறினால் ஆறு மாதச் சிறைத்தண்டனையுடன் சவூதி ரியால் 50,000 அபராதம் உட்பட விசிட் விசா காலம் கடந்தால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மீறுபவர் வெளிநாட்டவராக இருந்தால் அவரை நாடு கடத்துவதும் அபராதங்களில் அடங்கும் என அறிவித்துள்ளது.
அனைத்து வகையான விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 21 வரை மக்காவிற்குள் நுழையவும், ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்க தடை உள்ளதாகப் பொது பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 911 என்ற கட்டணமில்லா எண்ணையும், சவூதியின் மற்ற பகுதிகளில் 999 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு குடியுரிமை, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் புகாரளிக்குமாறு பொதுப் பாதுகாப்பு ஆணையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
துல் கதா 25 முதல் துல் ஹிஜ்ஜா 14 வரை ஹஜ் அனுமதியின்றி மக்காவிற்குள் நுழையும் சவுதி குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குச் சவூதி ரியால் 10,000 அபராதம் விதிக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புனித நகரமான மக்கா, மத்திய ஹரம் பகுதி, மினா, அரபாத், முஸ்தலிஃபா, ஹரமைன் ரயில் நிலையம், பாதுகாப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தற்காலிக மையங்களில் ஹஜ் அனுமதியை மீறுபவர்களுக்கு அபராதங்கள் அமைச்சகத்தால் விதிக்கப்படும்.





