தமிழர் திருநாள் பொங்கல் விழா-2024
பக்ரைன் பாரதி தமிழ் சங்கம் நடத்திய மாபெரும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைனில் உள்ள இந்தியன் கிளப்பில் நடைபெற்றது இந்நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட பக்ரைனில் வசிக்கக்கூடிய தமிழ் மக்கள் பெருவாரியாகப் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அண்டை நாடான சவுதி அரேபியாவில் தமிழ் மக்களின் நம்பிக்கை பெற்ற ஒப்பற்ற தமிழ் அமைப்பான சவுதி தமிழ் கலாச்சார மையத்தை அழைத்திருந்தனர்.
அழைப்பினை ஏற்று சவுதி தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சவுதி தமிழ் கலாச்சாரமயத்தின் கிழக்கு மண்டல தலைவர் முகமது நூஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சவுதி அரேபியாவின் மனிதநேய பண்பாளரும் யுனிவர்சல் இன்ஸ்பெக்சன் கம்பெனியின் CEO திருமிகு பத்ருதீன் அப்துல் அஜீத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
கடந்த 35 வருடங்களாகத் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை வளைகுடாவின் முத்து தீவான பகரைனில் பாரதி தமிழ் சங்கம் பெரும் விழாவாக எடுத்து வருவது அங்கு வசிக்கும் தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாகக் காலையில் நடைபெற்ற விழாவில் பெண்கள் தமிழ் மரபுப் படி பொங்கல் வைத்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் பரிமாறினர்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பக்ரைனின் இந்திய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் திருமிகு அஸ்லம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அதன் பின் பஹ்ரைனில் வசிக்கக்கூடிய சிறுவர் சிறுமியர் ஆண்கள் பெண்கள் எனப் பலரும் கலந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு தமிழ் மரபு கலந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வந்திருந்த அனைவருக்கும் பாரதி தமிழ் சங்கத்தினர் தமிழக மரபுப் படி தலை வாழை இலையுடன் கூடிய சிறப்பு மதிய விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விருந்தில் 1500 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் திருமிகு சாமி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.
அதன்பின் மாலையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராகத் தமிழகத்திலிருந்து வந்திருந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான திருமிகு மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு விழா பேருரை நிகழ்த்தினார்.
இந்த மாபெரும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையைக் காலையிலிருந்து இரவுவரை பக்ரைன் பாரதி தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் திருமிகு வல்லம் பஷீர் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.