அனுமதியின்றி பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வெளிநாட்டவர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களான 14 இந்தியர்களை சவுதி போலீசார் கைது செய்தனர். ரியாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானி தமீம் என்ற இடத்தில் கடந்த வியாழன் இரவு இந்நிகழ்வு நடந்துள்ளது. ரியாத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் விழா நடைபெறும் இடத்திற்கு வருவதற்குள் ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பானி தமீம் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்பகுதி மக்களின் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் உரிய அனுமதி இன்றி இந்நிகழ்ச்சியை நடத்திய பொருப்பாளர்களை கைது செய்தனர்.
நாட்டில் சவுதி பொது பொழுதுபோக்கு ஆணையம் அல்லது கண்காட்சி மற்றும் மாநாட்டு பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கு எதிராக அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் நேரலை நிகழ்ச்சிகள்,சமய நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்கள் அல்லது சிறப்பு அழைப்பாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி அவசியம் என உரிய துறைகளுக்கு பொழுதுபோக்கு ஆணையம் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் வணிக பதிவு நிறுவனங்கள் மூலம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





