அல்உலாவுக்கான ராயல் கமிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி இன்ஜி. அம்ர் அல்-மதானி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் 206 மில்லியன் சவூதி ரியால்கள் சம்பந்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அல்-மதானி அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமான முறையில் அணு மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றலுக்கான கிங் அப்துல்லா நகரிடமிருந்து தேசிய திறமை நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெற்றதன் மூலம் பணமோசடி செய்த குற்றங்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்.
அரசாங்கப் பணியில் சேர்ந்த பிறகு, அல்-மதானி முறையாக நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னரும் நிறுவனத்தில் தனது உரிமையைப் பராமரித்து வந்தார், மேலும் மோசடியில் ஈடுபட்ட மொத்தப் பணம் சவூதி ரியால் 20,66,30,905 ஆகும் எனத் தெரிய வந்துள்ளது.
மதானியின் உறவினர் முகமது பின் சுலைமான் அல்-ஹர்பி, சவுதி குடிமகன் ஒருவரும் கைது செய்யப்பட்டு, அல்-ஹர்பி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதை அல்-மதானிக்கு மாற்றியதை ஒப்புக்கொண்டார்கள்.
நிறுவனத்தின் பங்குதாரர்களான சவூதி குடிமகன் சயீத் பின் அத்தீஃப் அஹ்மத் சயீத் மற்றும் ஜமால் பின் காலித் அப்துல்லா அல்-டபால் ஆகியோரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தலைமை நிர்வாக அதிகாரியுடன் இரகசிய புரிந்துணர்வு மற்றும் ஒப்பந்தத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க முடிக்கப்பட்டு வருகின்றன, மேலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று நசாஹா வலியுறுத்தியது.
மேலும் மீறுபவர்களுக்கு எதிராகச் சட்டம் என்ன தேவையோ அதை எந்தவித தயக்கமும் இல்லாமல் அதிகாரம் தொடர்ந்து செயல்படுத்துகிறது என்றும் நசாஹா எச்சரிக்கை விடுத்துள்ளது.





