மெக்கா கிராண்ட் மசூதி கிரேன் விபத்து வழக்கில் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு மீறல்களுக்காகச் சவூதி பின்லேடன் குழுவிற்கு 20 மில்லியன் ரியால் அபராதம் விதித்த மக்கா குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
8 இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், நிர்வாகிகள், பொறியாளர்கள் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு, 3 பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
2015 செப்., 11ல் ஹரம் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் விபத்துக்குள்ளானதில் 110 பேர் உயிரிழந்தனர், 209 பேர் காயமடைந்தனர். ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் காற்று வீசியதே விபத்துக்கான காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் நிரபராதிகள் என்று மக்கா குற்றவியல் நீதிமன்றம் அக்டோபர் 1, 2017 அன்று தீர்ப்பளித்தது. மனிதத் தவறுகளை விட கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் பேரழிவு ஏற்பட்டது என்று மக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கான குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவை ஆகஸ்ட் 4, 2021 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.டிசம்பர் 2020 இல், குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை மூன்றாவது முறையாக வெளியிட்டது, சவூதி பின்லேடன் குழு உட்பட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.
பிப்ரவரி 2023 இல், மக்கா குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏழு பிரதிவாதிகள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து அவர்களில் மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் 30,000 ரியால் அபராதம், மற்றவர்களுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 15,000 ரியால் அபராதம் விதிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் பிரதிவாதிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவில், பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.