வரும் ஹஜ் பருவத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏராளமாக விநியோகிக்கப்பட உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ரியாத்தில் நடைபெற்ற உணவுப் பொருட்களுக்கான கால இடைவெளிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சர் அப்துல்ரஹ்மான் அல்-ஃபத்லி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், உள்நாட்டில் உணவுப் பொருட்கள் ஏராளமாகக் கிடைப்பதை உறுதிசெய்து பொருட்கள் இருப்புகளின் அளவுகள், உள்ளூர் மற்றும் வெளி விநியோகச் செயல்பாடுகள் மற்றும் உணவு விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரும் ஹஜ் பருவத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய தனியார் துறையின் பங்கினை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
நிதி அமைச்சகம், சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம், தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம், நகராட்சி, ஊரக விவகார அமைச்சகம் மற்றும் பல துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளின் குழு உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.