7,300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேலையின்மை காப்பீட்டு சலுகைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD)கடந்த புதன்கிழமை அறிவித்தது.
அவர்கள் வேலை தேடுவதில் தீவிரம் காட்டவில்லை என்பதும், மனித வள மேம்பாட்டு நிதியத்தால் (HADAF) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளை மறுப்பதும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத தவணைக்கான சமூக காப்பீட்டு ஓய்வூதியம் அவர்களுக்கு வழங்க மறுக்கப்பட்டது, மேலும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளவர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சமூகக் காப்பீட்டுச் சட்டத்தின் பிரிவு 17 இன் ஐந்தாவது பத்தியில், வேலை செய்யக்கூடிய பயனாளி வேலை தேடவில்லை அல்லது வேலைவாய்ப்புத் தளங்களுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது அமைச்சகத்திற்கு நிரூபிக்கப்பட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று குறிப்பிடுகிறது.
சமூகக் காப்பீட்டு ஓய்வூதியம் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பயிற்சி, தகுதி மற்றும் வேலை வாய்ப்புகளுக்குப் பதிலளிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்புத் தளங்கள்மூலம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் பணியாற்றக்கூடிய அனைத்து பயனாளிகளையும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட சமூகக் காப்பீட்டுச் சட்டத்தின் மூலம், பயனாளிகள் நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கும், மறுவாழ்வு, பயிற்சி மற்றும் வேலைகளைப் பெறுவதற்கான பல்வேறு வழிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்தியாளர்களாக மாற்றுவதற்கும் அமைச்சகம் முயல்வதாகக் கூறியுள்ளது.