தனது இருப்பிடத்தின் முகவரி தெரியாதாதால் நெடு நேரமாகத் தத்தளித்து கொண்டிருந்த கேரள ஹாஜி ஒருவரை சவூதி காயிதே மில்லத் தன்னார்வத் தொண்டர்கள் துரிதமாகச் செயற்பட்டு அவரது குடுத்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.முன்னதாக முகைதீன் குட்டி என்ற கேரளாவை சேர்ந்த ஹாஜி 16.06.2023 அன்று தனது இருப்பிடத்தில் அருகே உள்ள பள்ளியிலிருந்து இஷா தொழுது விட்டுத் தனது இருப்பிடத்திற்கு மீண்டும் திரும்பும்போது தவறுதலாக வழி தெரியாமல் வெகுதூரத்திற்கு சென்று விட்டார்.மேலும் அவர் தனது இருப்பிட அடையாள அட்டையை அணியாத காரணத்தினால் தனது சரியான இருப்பிட முகவரியைக் கூற முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
அதே சமயம் அந்த நேரத்தில் தன்னார்வ பணியில் ஈடுபட்டு இருந்த காயிதே மில்லத் பேரவையினர் ஹாஜியின் நிலை அறிந்து, இருப்பிட அட்டை இல்லை என்றாலும் சமயோஜிதமாகச் செயற்பட்டு சம்பந்தபட்ட ஹாஜி வழக்கமாகப் பயன்படுத்தும் பேருந்து எண்ணை அடிப்படையாகக் கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுப்பிடித்து பத்திரமாக ஒப்படைத்தனர்.இதனால் சம்பந்தபட்ட ஹாஜி, அவரது குடும்பத்தினர்கள் மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி பணியாளர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன நன்றி தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது மாதிரியான அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு அனைத்துக் ஹாஜிகளும் தங்களது இருப்பிட அடையாள அட்டையை எப்பொழுதும் அணிந்து இருக்க வேண்டும் என்று சவூதி காயிதே மில்லத் பேரவையின் மக்கா மண்டல ஒருங்கிணைப்பாளர் சித்திக் அகமது லெப்பை அனைத்துக் ஹாஜிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சவூதி காயிதே மில்லத் பேரவையின் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வோரு வருடமும் ஹாஜிகளுக்கான தனது தன்னார்வ சேவையை ஆற்றி வருவதோடு இந்த வருடமும் ஹாஜிகளுக்கான தனது சேவையினை மாநிலம் கடந்து இந்திய ஹாஜிகள் அனைவருக்கும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.