இஸ்லாம் மதம், புனித குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) ஆகியோருக்கு எதிராக ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நீதிக் குழுத் தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மக்காவைச் சேர்ந்த முஸ்லிம் உலக லீக் (MWL) தலைமைச் செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் இஸ்லாமிய உலகத்துடன் சிறந்த உறவுகளை அனுபவித்து வருவதாகவும், ஸ்வீடன் மக்கள் முஸ்லிம்களால் பாராட்டப்பட்டு மதிக்கப்படுபவர்களாகவும், நாகரீகமான மற்றும் நட்பான மக்களாக விவரிக்கப்படுவதாகவும் MWL இன் பொதுச் செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் முகமது அல்-இசா குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செய்த அவதூறுகள் இஸ்லாத்தின் உண்மைத்தன்மை பற்றிய அவரது அறியாமையை பிரதிபலிக்கின்றன என்றும், இவை தீவிரவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலானவை என்றும், அவை இஸ்லாத்தின் உண்மைத்தன்மைக்கும் அதன் சகிப்புத்தன்மைக்கும் தொடர்பில்லாதவை என்றும் MWL அறிக்கை வலியுறுத்தியது.
ஸ்வீடனுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே பிளவை ஏற்படுத்த முற்படுவதை எதிர்கொள்வதில் ஸ்வீடனின் கருணையுள்ள மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று அல்-இசா அழைப்பு விடுத்து,ஸ்வீடன் மக்களிடையே சகோதரத்துவம், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே நட்பைப் பேணுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாம் அல்லது பிற மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களுக்கு எதிரானதாக இருந்தாலும், வெறுப்பைத் தூண்டும் மற்றும் மத உணர்வுகளை அவமதிக்கும் நடைமுறைகளை வலியுறுத்துவது நியாயமற்றது என்றும்,சுவீடன் முஸ்லிம்கள் தங்கள் நாட்டை நேசிப்பதாகவும், அதற்காகப் பெருமிதம் கொள்வதாகவும், அதற்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் டாக்டர் அல்-இசா குறிப்பிட்டார்.
இத்தகைய பிரச்சனைகள் புனித குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப விவேகத்துடன் கையாளப்படும் என்றும் அல்-இசா தெரிவித்தார்.