வயதான சவூதி குடிமகனிடமிருந்து 23 மில்லியன் ரியால்களை திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு சவூதி குடிமக்களைக் கொண்ட கும்பலைக் கைது செய்ததாகச் சவூதி பப்ளிக் பிராசிகியூஷன் அறிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசாரணையில் தொழிலதிபர்கள், பெண் வழக்கறிஞர், அரசு ஊழியர், டெலிகாம் நிறுவன ஊழியர் ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவரை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளனர்.
ஆள்மாறாட்டம் செய்த தொழிலதிபர் உரிமம் பெறாமல் தொழில் செய்யச் சட்ட அலுவலகத்தைத் திறந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தனது கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை அரசு ஊழியர் ஒருவரின் உதவியுடன் பொய்யாக்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
டிஜிட்டல் நடைமுறைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதாகவும், கடுமையான தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அரசுத் தரப்பு உறுதி கூறியுள்ளது.