சவூதி அரேபிய குடிமகன் ஒருவர் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் வைத்திருந்த குற்றத்திற்காகச் சவூதி அரேபியாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பயண தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்கத் தவறியதற்காகவும், குற்றத்தை மறைத்ததற்காகவும் நீதிமன்றங்கள் பல்வேறு சிறைத் தண்டனைகளை வழங்கியுள்ளது.
குற்றவாளிக்கு எதிரான விசாரணை நடைமுறைகளை நிறைவு செய்துள்ளதாகப் போதைப்பொருள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜித்தா கவர்னரேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடியிருப்பில் சோதனை நடத்தியதில், சுமார் எட்டு பைகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் போதைப் பொருள்கள், எடை இயந்திரங்கள் மற்றும் மருந்துகளைப் பேக்கேஜிங் செய்வதற்கான வெற்று பைகள் மறைவிடத்தில் இருந்தன. பப்ளிக் பிராசிகியூஷன் இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி, விசாரணை நடத்தி தீர்ப்பை அறிவித்துள்ளது.