புனித ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முடித்தபின்னர், நபி (ஸல்) அவர்களை வாழ்த்தி, நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுகை நடத்துவதற்காகச் சனிக்கிழமை முதல் யாத்ரீகர்கள் மதீனா வந்தடைந்தனர்.
வெள்ளிக்கிழமை கல்லெறியும் கிரிகைகளை பூர்த்தி செய்துவிட்டு மினாவிலிருந்து விரைந்த யாத்ரீகர்கள், மதீனாவுக்குப் புறப்படுவதற்கு முன், ஹஜ்ஜின் கடைசி நிகழ்வான தவாஃப் அல்-விதா (பிரியாவிடை தவாஃப்) செய்ய மக்காவுக்குத் திரும்பினர்.
இதற்கிடையில், தொடர்ந்து நான்காவது நாளாகக் கல் எறிதல் நிகழ்வுக்காக வெள்ளிக்கிழமை இரவு மினாவில் தங்கியிருந்த யாத்ரீகர்கள், சனிக்கிழமை பிற்பகல் மூன்று ஜமாரத் மீது கற்களை வீசினர். அமைதியான சூழலில் பரந்த ஜமாரத் வளாகத்திற்குள் பாதுகாப்புப் படையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தேவையான அவசர நிலை பணியாளர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
பின்னர் அவர்கள் மினாவிலிருந்து மக்காவிற்கு தவாஃப் அல்-விதாவை நிறைவேற்றுவதற்காக எந்தவித சிரமுமின்றி புனித யாத்திரையை மகிழ்ச்சியுடன் முடித்தனர்.
புனித யாத்திரை முடிந்ததும், பல யாத்ரீகர்கள் மக்காவையும் மதீனாவையும் ஜித்தா வழியாக இணைக்கும் ஹரமைன் ரயிலிலும், ஹிஜ்ரா சாலை வழியாகப் பேருந்துகளிலும் மதீனாவுக்குப் புறப்பட்டனர்.
மதீனாவில் ஹஜ் பணி தொடர்பான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஹஜ்ஜுக்குப் பிந்தைய காலத்தில் யாத்ரீகர்களைப் வரவேற்பதற்கும், புனித நகரத்திற்குச் செல்லும் யாத்ரீகர்களின் சுமூகமான வருகை மற்றும் பேருந்துகளின் இயக்கத்தை உறுதிசெய்யும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கும் தங்கள் ஆயத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.