புனித குர்ஆனை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சவூதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் (CFM) தொடக்க அமர்வில் உரையாற்றும்போது வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் இவ்வாறு கூறினார். மேற்கத்திய நாடுகளில் புனித குர்ஆனை இழிவுபடுத்துதல், எரித்தல் போன்ற சம்பவங்களைத் தடுப்பதை குறித்து விவாதிக்க 14 வது இஸ்லாமிய உச்சி மாநாடு கூட்டப்பட்டது.
திருக்குர்ஆன் மீதான இந்தத் தொடர் தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் இந்த ஆத்திரமூட்டும் செயல்களை எந்த நியாயத்தின் கீழும் ஏற்றுக்கொள்ள முடியாது என இளவரசர் பைசல் கூறியுள்ளார்.
சகிப்புத்தன்மை மற்றும் அமைதியைப் பேணுவதற்கும், இஸ்லாத்தின் உண்மையான உருவத்தைப் பாதுகாப்பதற்கும், தீவிரவாதத்தை நிராகரித்து எதிர்த்துப் போராடுவதற்கும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து OIC செயல்படுகிறது என்று அமைச்சர் தெளிவுப்படுத்திணார்.
கருத்துச் சுதந்திரம் மக்களிடையே மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும், மக்களிடையே வெறுப்பையும் மோதலையும் பரப்புவதற்கான கருவியாக இருக்காது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சகிப்பின்மை, வெறுப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதத்தை உருவாக்கும் அனைத்து வகையான நடைமுறைகளையும் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சவூதி தரப்பிலிருந்து, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பொறியாளர் வலீத் அல்-கெரிஜி, டாக்டர் அப்துல்லா அல்-தாயர் மற்றும் சலே அல்-சுஹைபானி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.