சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) விமானம் அல்லது விமான நிலைய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள் 20 நவம்பர் 2023 முதல் அமல்படுத்தப்பட்டு விமானப் பயணத்தின்போது டிக்கெட், போர்டிங், விமானத்தில் உள்ள சேவைகள், பொருட்களைக் கையாளுதல் மற்றும் சிறப்புத் தேவைகளுள்ள பயணிகளுக்கு உணவு வழங்குதல் ஆகிய சேவைகளை இது உள்ளடக்கும்.
விமான தாமதங்கள், ரத்துசெய்தல், அதிக முன்பதிவு மற்றும் எதிர்பாராத நிறுத்தங்கள் போன்ற சூழ்நிலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இழப்பீட்டு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது, தொலைந்து போன அல்லது சேதமடைந்த பொருட்களுக்குக் குறைந்தபட்சம் 6,568 சவுதி ரியால்கள் இழப்பீடு பெறவும்,2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தாமதமானால், விமான நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறுத்துமாறு பயணிகள் கோருவதற்கு இந்த விதிமுறை அனுமதியளிக்கிறது.
பொதுமக்கள், விமான சேவை வழங்குநர்கள் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பின் விதிமுறைகள் முடிவு செய்யப்பட்டு, GACA விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்குத் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விதிமுறைகள் முக்கிய பங்காகப் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 330 மில்லியன் என மும்மடங்காக உயர்த்துவது மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 250 க்கும் மேற்பட்ட உலகளாவிய இடங்களுடன் சவூதியை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.