மதீனாவை அரபு மொழியைக் கற்கும் மையமாகவும், கலாச்சார மற்றும் கல்வி சுற்றுலாவை ஊக்குவிக்கவும், இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தாய்மொழி அல்லாதவர்களுக்கு அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் ‘அரபுக் கற்றல் ‘திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மதீனா மேம்பாட்டு ஆணையம்.
இது பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள், சுகாதாரப் பயிற்சியாளர்கள், தூதரகப் பணிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அரபு மொழியைக் கற்க ஆர்வமுள்ளவர்கள் என அனைவருக்கும் குறுகிய மற்றும் நடுத்தர காலக் கல்வித் திட்டமாக வழங்கப்படும்.
ஆறு செமஸ்டர்கள் வரை நீட்டிக்கப்படும் இத்திட்டம் Advance-A1, A1, Ar, B1, Br மற்றும் C போன்ற தொடக்கநிலை முதல் மேம்பட்டது வரை ஆறு நிலைகளை உள்ளடக்கி, ஒவ்வொரு நிலையின் காலம் ஆறு கல்வி வாரங்கள், வாரத்திற்கு மொத்தம் 15 மணிநேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உபகரணங்கள், பல்கலைக்கழக நூலகத்தில் திறந்த உரையாடல் அமர்வுகள் மற்றும் விரிவுரைகளைக் கேட்பது, நிகழ்ச்சியின்போது பல்கலைக்கழகத்திற்கும் நபிகள் நாயகம் மசூதிக்கும் இடையில் பயிற்சியாளர்களுக்குப் போக்குவரத்து சேவைகளும் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையதளம் https://elp.iu.edu.sa/ProgramBatch?programTypeId=2 வழியாகத் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான விண்ணப்பங்களை முன் பதிவு செய்து சமர்ப்பிப்பதன் மூலம், சவூதி அரேபியாவிற்கு நுழைவு விசா பெற்ற அனைவருக்கும் நேரில் படிக்கும் திட்டம் பல்கலைக்கழகத்தில் கிடைக்கிறது என்று இஸ்லாமிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.