Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜெத்தாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தமிழர்கள் சங்கமம் நிகழ்ச்சி இரத்து. அமைச்சரை விலைபேசிய...

ஜெத்தாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தமிழர்கள் சங்கமம் நிகழ்ச்சி இரத்து. அமைச்சரை விலைபேசிய லண்டன் பைசல்.

995
0

சவூதி தமிழ் கலாச்சார மையம், சவூதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தையும், தமிழர்களுக்குள் உதவும் நோக்கில் செயல்படும் ஒரு வணிக நோக்கமற்ற அமைப்பாகும்.

சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்கள் பங்கேற்பதாக உறுதியளித்த “தமிழர்கள் சங்கமம்” நிகழ்வு அனைத்து ஏற்படுகளும் மிகுந்த பொருட்செலவில் தயாராக இருக்கும் சூழலில், திடீரென்று இரத்து செய்யப்பட்டதற்கு பின்னால் இருக்கும் சில அருவருக்கத் தக்க செய்திகளைச் சவூதியில் வசிக்கும் தமிழர்களுக்கும், தன்னலம் பாராமல் மக்கள் சேவைபுரியும் ஏனைய அயலக அணிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்போடு சில முக்கியமான தகவல்களைப் பதிவு செய்கிறோம்.

அமைச்சர் அவர்கள் தனிப்பட்ட பயணமாகவும் உம்ரா மேற்கொள்ளவும் சவூதி வருவது உறுதியான நிலையில் அமைச்சர் அலுவலகத்திலிருந்து சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் நிர்வாகிகளைத் தொடர்ப்பு கொண்டு, அமைச்சர் அவர்கள் தமிழர்களைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறார். அதனால் நீங்கள் ஏற்கவே மே தின நிகழ்வுக்கு அமைச்சர் அவர்களை அழைத்ததன் காரணமாக இந்த நிகழ்வை நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். அமைச்சர் சார்பில் உங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் அனுப்ப சொல்லியிருக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்களும் பெரிதும் மகிழ்ந்து நிகழ்வை நடத்த ஒப்புக்கொண்டோம்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23 ம் தேதி அன்று எங்கள் அமைப்புக்கு அமைச்சர் அவர்கள் முறையாக விழாவில் கலந்து கொள்வதாக அனுமதி கடிதம் அனுப்பினார்.

அமைச்சர் கேட்டுக்கொண்டதன் பொருட்டு முறையாகச் சவூதி அரசு சட்டத்திட்டத்துக்குட்பட்டு, அரசாங்க அனுமதிகளோடு, சவூதிவாழ் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கும் நிகழ்வு “தமிழர்களின் சங்கமம்” என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது.

நிகழ்வு குறித்த எல்லா தகவல்களும் ஒவ்வொரு நாளும் அமைச்சர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் உள்ளிட்டவர்கள் தங்குவதற்கான 5 நட்சத்திர விடுதி அறை, சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொகுசு வாகன ஏற்பாடு, அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுக்கான விழா அரங்கம் என எல்லாமும் பெரும் பொருட்ச் செலவில் சவூதி தமிழ் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன. விழாவின் நிறைவு பணிகள் நடைபெற்று வந்தது.

சவூதியில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு ஐநூறு பேர் உணவருந்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், திடீரென்று ஆகஸ்ட் 25 மற்றும் 26/08/2023 தேதிகளில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் உறுப்பினரும் லண்டன் திமுக பொறுப்பாளருமான திரு.பைசல் அவர்கள் எங்கள் அமைப்பு நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, அமைச்சரின் சவூதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நான் தான் ஒருங்கிணைக்கத் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெவித்தார். மேலும் நான் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதி அறை ஏற்பாடு செய்துவிட்டு என்னை அழைப்பதற்கு விமான நிலையத்திற்கு வாகனம் அனுப்ப வேண்டும் என்று கேட்டார், தொடர்ந்து வந்த அடுத்த தொலைபேசி அழைப்பில் அமைச்சர் பயண செலவினங்களுக்கு 50,000 ரியால் பணம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டார், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 இலட்சம் கேட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் மொத்த செலவுகளையும் கவனித்து வரும் நிலையில் எதற்காக உங்களுக்குப் பணம் தர வேண்டும் எனக் கேட்டதற்கு இது அமைச்சரின் தனிப்பட்ட செலவுகளுக்கு என்று எனக்கு நீங்கள் தர வேண்டும் எனக் கேட்டார்.

இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த நாங்கள் பணம் தர இயலாது என்று நேரடியாக அவரிடமே தெரிவித்தோம். தொடர்ந்து அவர் பணம் கேட்டு எங்களைத் தொடர்புகொண்ட நிலையில் அமைச்சரிடம் இதுபற்றிப் பேசிவிட்டு பதில் சொல்கிறோம் என்று சொன்னோம். அமைச்சரிடம் போனில் பேச வேண்டாம் இது பற்றி அவர் பேசமாட்டார் என்னிடம் பணம் கொடுங்கள் நான் அமைச்சருக்குத் தகவல் சொல்லிவிடுகிறேன் என்று லண்டன் பைசல் சொன்னதில் எங்களுக்குச் சந்தேகம் அதிகமானது.

நாங்கள் அமைச்சர் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் ஆனால் அவர் சென்னையில் இருக்கிறார் முதலமைச்சரை சந்திக்க சென்றுவிட்டார் என அவரது உதவியாளர் தகவல் சொன்னார். அதற்குள் அடுத்து அழைத்த லண்டன் பைசல் நீங்கள் ஏன் அமைச்சர் உதவியாளரைத் தொடர்பு கொண்டீர்கள் பணம் கொடுத்தால் அமைச்சரை உங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து வருவேன் இல்லையென்றால் வேறு நிகழ்ச்சி இருக்கிறது அவர்கள் பணம் தரத் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

நாங்கள் நேரடியாக அமைச்சரிடம் பேசிக்கொள்வோம் என இருந்த நிலையில் ஆகஸ்ட் 28ம் தேதியன்று NRTIA அமைப்புக்கு ஒரு கடிதம் அமைச்சரிடம் இருந்து வந்திருப்பதை அறிந்தோம். இது குறித்து உடனே அமைச்சர் உதவியாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இரண்டு நிகழ்ச்சிக்கும் அமைச்சர் செல்கிறார் என சொன்னார், அன்று மாலையே எங்கள் அமைப்பின் செயற்குழுவை கூட்டி கருத்து கேட்டபோது எல்லோரும் ஒரு சேர இந்த நிகழ்ச்சியை இரத்து செய்துவிடலாம் நாம் செலவு செய்த 30,000 ரியால் வீணாகப் போனாலும் பரவாயில்லை, நம் அமைப்புக்குக் கெட்ட பெயர் ஏற்படும் எனச் சொன்னதால், நிகழ்ச்சியை இரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டோம்.

அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய உறுப்பினர் லண்டன் பைசல் பணம் பறிக்கும் நடவடிக்கைக்கு அமைச்சருக்குத் தெரியாமலேயே அமைச்சருடன் உடன் இருப்பவர்கள் துணை போயிருக்கிறாரார்களோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது.

வளைகுடா நாட்டிற்கான வாரிய உறுப்பினரான எஸ் எஸ் மீரான் அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தெரிந்தும், அவருக்குத் தெரியாமல் லண்டனில் இருந்து இங்கே வந்து வசூல் வேட்டை செய்கிறாரா லண்டன் பைசல் என்பதும் எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பணம்பறிக்கும் நோக்கோடு செயல்படும் ஒரு நபரை எப்படி வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சியும், கவலையும் உருவானது.

இதுகுறித்த விரிவான கடிதத்தைத் தமிழ்நாடு முதல் அமைச்சர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம், திமுக அயலக அணித் தலைவர், அணிச்செயலாளருக்கும் அனுப்பியுள்ளோம்.

அயலகத்தில் வசிக்கும் தன்னார்வம் கொண்ட அமைப்பினருக்கு பொருட்செலவுகளையும், மன உளைச்சலையும் உருவாக்கும் லண்டன் பைசல் போன்ற பணம் வசூலிக்கும் போலியான நபர்களைக் குறித்து அயலகத்தில் இயங்கும் அமைப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எம்முடைய முதன்மை நோக்கம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!