ஜெத்தாவில் நேற்று பிப்ரவரி 1 வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
கனவு மெய்ப்பட எனும் தலைப்பிலும், மரம் வளர்த்துச் சுற்றுச் சூழல் காப்போம் எனும் தலைப்பிலும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கு நடந்த போட்டியில் சுமார் 15 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 220 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
ஷரஃபியா லக்கி தர்பார் உணவக ஆடிட்டோரியத்தில் நடந்த போட்டி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 10:30 வரை 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
ஓவியர்கள் பாஷா மற்றும் ஆமினா ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசு பெற்ற ஓவியங்களைத் தேர்வு செய்து கொடுத்தனர்.
தஞ்சை லயன் ஜாகிர் அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியைத் திருமதி அஜிதா சலீம் மற்றும் பூஜா நரேஷ் ஆகியோர் திறமையாக நிர்வகித்து நடத்தி கொடுத்தனர்.
இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, அல் மவாரித், அஹ்டாப், ஸ்ரீலங்கங்கன் பன்னாட்டுப் பள்ளி, அல் உரூத், நியூ அல் உரூத் பெண்கள் பள்ளி, அல் வாஹா, அல் வாடி, நோவல், டில்லி பப்ளிக் ஸ்கூல், அல் ஃபாலாஹ், பாகிஸ்தான் இண்டர் நேசனல் பள்ளி, ஜெத்தா அஹ்மத் பன்னாட்டுப் பள்ளி, MES செண்டர் ஸ்கூல் மற்றும் ஜெயஸ்ரீ கிண்டர் கார்டன் போன்ற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட இந்திய மாணாக்கர்களும், ஸ்ரீ லங்கா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய தேச மாணாக்கர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது சிறப்புக்குறியது.
சுமார் 500 க்கும் அதிகமான மக்களை மிகத்திறமையாகக் கையாண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வடை, சமோசா, பிஸ்கட், பேரீத்தம்கனிகள், ஜூஸ் மற்றும் தேநீர் வழங்கிச் சிறப்பித்தனர்.
ஓய்வு நாளை எங்கள் பிள்ளைகளின் திறமையை வெளிக் கொணர கொண்டு வந்த இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் நடத்திய நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றிகள் என்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், ஷில்டுகளை வருகின்ற பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நடக்க இருக்கின்ற காமெடி கலாட்டா எனும் Winter Tamil Fest நிகழ்ச்சியில் வழங்க இருப்பதாக நிர்வாகிகள் கூறினர்.





