பொது முதலீட்டு நிதியத்திற்கு (PIF) சொந்தமான சவூதி என்டர்டெயின்மென்ட் வென்ச்சர்ஸ் நிறுவனம் (SEVEN)அதன் புதிய இடத்திற்கான கட்டுமானப் பணிகளை மதினாவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டமானது 84,000 சதுர மீட்டருக்கும் அதிகமான மொத்த கட்டுமானப் பரப்பளவில் 100,000 சதுர மீட்டருக்கும் அதிகமான வளர்ச்சிப் பரப்பளவைக் கொண்டு கிங் ஃபஹத் சென்ட்ரல் பூங்கா அருகில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
4,000 சதுர மீட்டர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த கேமிங் வசதிகள் நிறுவப்பட்டிருப்பதால் பார்வையாளர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை இத்திட்டம் வழங்கும்.
இளம் தலைமுறையினர் மற்றும் பெரியவர்கள் இ-கார்டிங் டிராக்கை இரண்டு வெவ்வேறு நிலைகளில் பயன்பெறவும்,
அதே நேரத்தில் டிஸ்கவரி அட்வென்ச்சர்ஸ் சென்டர் அதன் பார்வையாளர்களுக்குக் காடு போன்ற சூழலில் பலவிதமான சாகசங்களையும் சவால்களையும் மேற்கொள்ளும் வாய்ப்பையும், ப்ளே-டோஹ் பொழுதுபோக்கு மையம் அதன் கற்பனை மற்றும் படைப்பாற்றலைக் கொண்டு குழந்தைகள் வேடிக்கையாக இருப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
மதீனாவில் அமைக்கப்படவுள்ள புதிய இடமானது, ஐமேக்ஸ் ஷோரூம்கள், விஐபி அரங்குகளுடன் கூடிய அதிநவீன சினிமா, 10-வழி நடைமேடை, சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், விளையாட்டுகள் மற்றும் சாகசங்கள் மட்டுமின்றி ஓய்வெடுக்க விரும்புவோர் தங்கள் செயல்பாட்டைப் புதுப்பிக்கச் சிறந்த உடற்பயிற்சி மற்றும் ஓய்வு மையம் உட்பட பல வசதிகளுடன் அமைக்கப்படும்.
சவூதி என்டர்டெயின்மென்ட் வென்ச்சர்ஸ் 21 பொழுதுபோக்கு இடங்களை உருவாக்கச் சவூதி ரியால் 50 பில்லியனுக்கும் மேலாக முதலீடு செய்கிறது, ரியாத்தின் அல்-ஹம்ரா சுற்றுப்புறம் மற்றும் தபூக்கில் அதன் பொழுதுபோக்கு திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்குவதாக நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் சவூதி அரேபியா முழுவதும் ரியாத், அல்-கர்ஜ், மக்கா, ஜித்தா, தாயிஃப், தம்மாம், கோபார், அல்-அஹ்ஸா, மதீனா, யான்பு, அபஹா, ஜிசான், புரைதா மற்றும் தபூக் ஆகிய 14 நகரங்களில் நிறுவனத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.