சவூதி தரநிலைகள், தகவல் தொடர்பு, அளவியல் மற்றும் தர அமைப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் ஜன.1, 2025 முதல் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்களை தரநிலையாக்க முடிவு செய்து, அதனடிப்படையில் USB-C வகை மட்டுமே தரப்படுத்தப்பட்ட இணைப்பாக இருக்கும் என அறிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் கழிவுகளின் அளவைக் குறைப்பதன் மூலம், ஆண்டுக்கு 2.2 மில்லியன் யூனிட்களுக்கு மேல் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜர்கள் மற்றும் கேபிள்களைச் சார்ஜ் செய்யும் உள்நாட்டு நுகர்வு அளவைக் குறைப்பதோடு சவூதியில் உள்ள நுகர்வோரின் செலவினத்தைச் சவூதி ரியால் 170 மில்லியனுக்கும் அதிகமாகச் சேமிப்பதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தின் கட்டாய அமலாக்கம் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் நிலை ஜனவரி 1, 2025 இல் தொடங்கி இதில் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், டிஜிட்டல் கேமராக்கள், இ-ரீடர்கள், போர்ட்டபிள் வீடியோ கேம் சாதனங்கள், ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள், கீபோர்டுகள் மற்றும் மவுஸ் ஆகியவையும், இரண்டாம் நிலை ஏப்ரல் 1, 2026 இல் தொடங்கி கையடக்க வழிசெலுத்தல் அமைப்புகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ரவுட்டர்கள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவையும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு இணங்க, 2025 ஆம் ஆண்டு முதல் சார்ஜிங் போர்ட்களின் வகைகளை USB-C வகையைத் தரநிலைப்படுத்த நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்களை கட்டாயப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.