புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் மேற்பார்வைக்கான தேசிய மையம் (NCIO) அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், ஆய்வு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை உருவாக்கிச் சவூதியில் வணிகச் சூழலை மேம்படுத்தப் பங்களிக்கும் என்று நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் மஜீத் அல்-ஹொகைல் தெரிவித்தார்.
கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் இந்த மையம் அனைத்துத் தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், ஆய்வு செய்வதற்கான குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை மறுபரிசீலனை செய்து அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த முயற்சியானது வணிகச் சூழலை மேம்படுத்துவதில் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும் என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி.அஹ்மத் அல்-ராஜி கூறினார்.
ஒழுங்குமுறை அதிகாரிகளின் தொடர்ச்சியான வருகைகளின் சுமையைக் குறைப்பதற்கும், தனியார் துறை நிறுவனங்களின் இணக்க விகிதங்களை உயர்த்துவதற்கும், மனித மற்றும் நிதி ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கும் இந்த மையம் பங்களிக்கும் என்று சவூதியில் வணிக சூழலை மேம்படுத்துவதற்கான முடிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹிஷாம் அல்-ஜாதே.