ஜிசானில் நடந்த சர்வதேச சவூதி காபி கண்காட்சியில், கடந்த தசாப்தத்தில் காபி தரத்தில் சவூதியின் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைச் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை துணை அமைச்சர் இன்ஜி.மன்சூர் அல்-முஷைதி வலியுறுத்தினார். உள்ளூர் பிரபல்யமாக இருந்த சவூதி காபி, உலகின் தலைசிறந்த காபி என்ற பெருமையைப் பெற்று, தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உழவர் பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் செறிவுக் கூட்டங்கள் போன்ற பல்வேறு தொடர்புடைய நிகழ்வுகளுடன், காபி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மேற்கில் 2,185 காபி பண்ணைகள் உள்ளன, அதில் சுமார் 391,160 நாற்றுகள் நடப்பட்டுள்ளது. ஜிசான் பகுதியில் 1,109 பயனாளிகள் தங்கள் பண்ணைகளில் சுமார் 219,160 நாற்றுகளை நட்டுள்ளனர்.
2023 டிசம்பர் இறுதிக்குள் 3,052 பயனாளிகளைச் சென்றடையும் வகையில் 155 மில்லியன் ரியால்களுக்கு மேல் மானியத்துடன், கிராமப்புற விவசாய மேம்பாட்டுத் திட்டமான ‘கிராமப்புற சவூதி அரேபியா’ மூலம் காபி துறைக்கு அளிக்கப்பட்ட கணிசமான ஆதரவை துணை அமைச்சர் எடுத்துரைத்தார்.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஜிசான் பிராந்தியத்தில் விவசாய மேம்பாட்டு நிதியம் சுமார் 1.9 பில்லியன் ரியால் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அல்-முஷைதி குறிப்பிட்டார். கால்நடைகள், தாவரங்கள் மற்றும் மீன்வளத் துறைகள், காபி சாகுபடித் திட்டங்களில் 79 முதலீட்டு வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.





