சவூதி முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ் சவூதி அரேபியா மற்றும் இந்தியா ஒரு சிறப்பு விண்வெளி திட்டத்தைத் தொடங்கவுள்ளதாகவும், சவூதி பொது முதலீட்டு நிதியம் (PIF) இந்தியாவில் ஒரு அலுவலகத்தைத் திறக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT) சவுதி அரேபியா தனது நிதி அமைப்பின் அலுவலகத்தை அமைக்கப் பரிசீலிக்கும் என்றும், ரியாத்தில் முதலீட்டு மேம்பாட்டு அலுவலகத்தைத் தனது அமைச்சகம் தொடங்க பரிந்துரைப்பதாகவும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் அதிகாரப்பூர்வ இந்தியா வருகையையொட்டி நடைபெற்ற இந்தியா – சவுதி முதலீட்டு மன்றத்தில் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் சுமார் 50 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை சுமார் $3.5 பில்லியன் மதிப்புள்ள பரந்த அளவிலான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகும்.