2023 ஜூன் 11 மற்றும் 12 தேதியில் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில், அரபு-சீன வர்த்தக மாநாட்டின் 10வது அமர்வு மற்றும் 8வது முதலீட்டு கருத்தரங்கம் “செழிப்புக்கான ஒத்துழைப்பு” என்ற கருப்பொருளின் கீழ் சவூதி அரேபியா நடத்தவுள்ளது.
முதலீட்டு அமைச்சகம் ,வெளியுறவு அமைச்சகம், அரபு லீக்கின் தலைமைச் செயலகம், சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சில், அரபு அறைகளின் ஒன்றியம் மற்றும் பல அரசு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இது அரபு-சீன வணிகம் மற்றும் முதலீட்டின் மிகப்பெரிய கூட்டமாகும், இதில் 23 நாடுகள், மூத்த அரசாங்க அதிகாரிகள், CEO க்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதும், கூட்டாண்மையை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
அரபு நாடுகளுக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையில் பொருளாதார, வணிக மற்றும் கலாச்சார உறவுகள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக முதலீட்டு அமைச்சர், இன்ஜி.காலித் பின் அப்துல்அஜிஸ் அல்-ஃபாலிஹ் தெரிவித்தார். அரபு-சீன வணிக மாநாடு சவூதி தலைமையிடமிருந்து குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.