சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இந்த வாரத்தின் இறுதி வரை அதிகபட்ச வெப்பநிலையாக 46 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 48 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரையிலும், ரியாத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 46-48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜுபைல், அல்-கோபார், தம்மாம், கதீஃப், அப்காய்க் மற்றும் ராஸ் தனுரா ஆகிய ஆளுநரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குக் கடந்த சனிக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, இப்பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை 47-48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்புடன் கூடிய வெப்ப அலை வெளிப்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது எனவும், மக்கா மற்றும் மதீனாவின் சில பகுதிகளில் தூசி புயலுடன் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று NCM தெரிவித்துள்ளது.