சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் திங்கட்கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி குடிமைத் தற்காப்பு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கா, தாயிஃப், அசிர், அல்-பஹா மற்றும் ஜிசான் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கனமழையால் பாதிப்பு ஏற்படக்கூடும். இது கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வழிவகுக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
மதீனா, தபூக், நஜ்ரான், ரியாத், ஹவ்தாத் பானி தமீம், அல்-அஃப்லாஜ், அஸ்-சுலைல், அல்-கர்ஜ், அல்-ஹாரிக் மற்றும் அல்-ஷர்கியா ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் தூசி நிறைந்த காற்று வீசுக்கூடும்.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது ஆபத்தாக முடியும் எனச் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுமாறு குடிமைத் தற்காப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.