சனிக்கிழமையன்று 20 சவூதி குடிமக்கள் மற்றும் 1,866 பிற நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சூடானிலிருந்து சவூதி வெளியேற்றியுள்ளது.அவர்கள் கப்பல் மூலம் ஜித்தாவை வந்தடைந்தனர்.
139 சவூதி குடிமக்கள் மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ருவாண்டா மற்றும் எகிப்து உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த 4,738 நாட்டினரைக் கொண்ட 4,879 பேர், நாட்டின் பணி தொடங்கியதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகச் சவூதி தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஐக்கிய நாடுகளின் ஊழியர்களும் அடங்குவர். சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டை மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது.
இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கு (RSF) தலைமை தாங்கும் மொஹமட் ஹம்தான் டாக்லோ ஆகியோரின் படைகளுக்கு இடையே நடந்த சண்டையில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் வெளியேற்றத் திட்டத்தில் சவூதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தனர்.