சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை 1100 ரியாலில் இருந்து 1320 ரியாலாக 20% உயர்த்துவதற்கான அரச ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பட்டத்து இளவரசரும் பிரதமரும், பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சிலின் தலைவருமான முகமது பின் சல்மானின் பரிந்துரையின் பேரில் மன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மூன்று மாதங்களுக்குக் குடிமக்கள் கணக்குத் திட்டத்தின் பயனாளிகளுக்குப் பதிவு மற்றும் கூடுதல் நிதி உதவியைத் தொடங்குவதற்கான ஆணையையும் மன்னர் பிறப்பித்தார்.
ஜூலை 2022 இல் நடைமுறைக்கு வந்த குடிமக்கள் கணக்குத் திட்டத்தின் பயனாளிகளுக்கான ஆதரவு நீட்டிப்பு செப்டம்பர் 2023 வரை தொடரும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் அதிகரிப்பு ஒவ்வொரு பயனாளியின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பங்களிக்கும் என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல்-ரிஸ்கி தெரிவித்தார். இந்த முடிவு நவம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 1100 ரியாலுக்கு பதிலாக 1320 ரியாலும், சார்ந்திருப்பவர்களுக்கு 550 ரியாலுக்கு பதிலாக 660 ரியாலும் வழங்கப்படும். இது பயனாளிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், அவர்களுக்குச் சமூக ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதாகவும், நிதிச் சுதந்திரத்தை அடைவதன் மூலம் பயனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் அல்-ரஸ்கி கூறினார்.