சவூதி அரேபியாவின் தேசியக் கொடியை வர்த்தக முத்திரையாக அல்லது வணிக விளம்பர நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம், இன்று செப்டம்பர் 23, 93வது தேசிய தினத்தில் வெளியிட்டுள்ளது.
பல்வேறு வகையான தேசிய கொடி பயன்பாட்டு மீறல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
1- கொடியைக் கட்டவோ அல்லது எடுத்துச் செல்லும் கருவியாகப் பயன்படுத்தவோ கூடாது.
2- சேதமடைந்த நிலையில் உள்ள தேசிய கொடியைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
3- நாட்டின் தேசிய கொடியை வர்த்தக முத்திரையாகவோ, வணிக விளம்பர நோக்கங்களுக்காகவோ அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது.
4- கொடியை எந்த வடிவத்திலும் வணிகப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது.
5- விலங்குகளின் உடலில் கொடியை வைக்கவோ அல்லது அச்சிடவோ கூடாது.
6- கொடியில் தேவையில்லாத வாசகங்கள், சின்னங்கள் மற்றும் வரைபடங்கள் இருக்கக் கூடாது.
7- தேசியக் கொடியை எந்தச் சூழ்நிலையிலும் தலைகீழாகப் பயன்படுத்தக் கூடாது.
8- நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.