மஸ்கட்: ஓமனில் மதிய நேரத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் எனத் தொழிலாளர் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயிலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நிறுவனங்கள் மதிய இடைவேளையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமனில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 3.30 மணி வரை இருக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து கட்டுமான மற்றும் திறந்தவெளி பகுதிகளும் நண்பகலில் மூடப்பட வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகத்தின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் தலைவர் ஜகாரியா காமிஸ் அல் சாதி கூறினார்.
மதிய நேரத்தில் இயங்கும் நிறுவனங்களால் ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால் அமைச்சகம் சட்ட நடவடிக்கை எடுக்கும். மீறுபவர்களுக்கு 500 ரியால்கள் வரை அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். சட்டத்தைப் பின்பற்றாத நிறுவனங்கள்குறித்து தொலைபேசி மூலமாகவோ அல்லது அமைச்சகத்தின் இணையதளங்கள் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.