சவூதி பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் வழிபாட்டு பகுதிகளிலும் ஈத் அல்-அதா தொழுகைகளை நடத்துமாறு இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லதீஃப் அல்-ஷேக் உத்தரவிட்டுள்ளார்.
சில மையங்கள் மற்றும் கிராமங்களில் பெருநாள் தொழுகையின்போது வழிபாட்டாளர்கள் செல்லாத மசூதிகள், தொழுகை இடங்கள் இந்த உத்தரவிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். சூரிய உதயத்திற்குப் பின் 15 நிமிடங்களுக்குப் பிறகு ஈத் அ-அதா தொழுகைகளை நடத்துமாறு கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 1/12/1444 AH – உம்முல்-குரா நாட்காட்டியின் படி – ஜூன் 19, 2023, கி.பி., துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்பம் எனச் சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரபாத் தினம் செவ்வாய்க்கிழமை, ஜூன் 27, மற்றும் ஈத் அல்-அதா ஜூன் 28 புதன்கிழமை கொண்டாடப்படும்.தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 4 நாட்கள் ஈத் அல்-அதா விடுமுறைகள் இருக்கும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) முன்னதாக அறிவித்தது.
அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு துறைகளுக்கான ஈத் அல்-அதா விடுமுறைகள் துல்-ஹிஜ்ஜா 9 அதாவது ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூன் 30, துல்-ஹிஜ்ஜா 12 வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று தெரிவித்துள்ளது.