உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு உலக சாதனைக்காக,32 நாடுகள் கலந்து கொண்ட இணைய வழியில் “திருக்குறளில் வாழ்வியல் பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்கம்”.
உலக தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையும் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் திருக்குறள் இருக்கை, முத்திரை வலையொளி மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி ஆகிய அமைப்புகளால் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 09.30 மணி முதல் இரவு 09.30 மணிவரை, தொடர்ச்சியாக இடைவிடாது 12 மணி நேரம், “திருக்குறளில் வாழ்வியல்” என்ற பொருண்மையில் உலக சாதனைக்காக, இணைய வழியில் “பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்கம்” நடைபெற்றது.
நிகழ்வில், கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் துபாய் சமூக நல ஆர்வலருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் முன்னிலையில் வகித்தார். உலகத் தமிழ்ச்சங்க தலைவரும் VGP குழும தலைவருமாகிய செவாலியர் முனைவர் V.G. சந்தோஷம் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ். மஸ்தான் நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ஜா. குமார், மேற்கு வங்க அரசின் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர்- கோ. பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் போ.சத்யமூர்த்தி திருக்குறள் உரையாற்றினார். தொடர்ந்து உலகின் ஆறு கண்டங்களிலிருந்தும் 32 நாடுகளைச் சேர்ந்த 64 பேச்சாளர்கள், “திருக்குறளில் வாழ்வியல்” பற்றிப் பேசினார்கள். அவற்றில் சவூதி அரேபியாவிலிருந்து சவூதி தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் திரு. சுரேஷ் பாரதி அவர்களும், செயலாளர் திரு, அஹமது இம்தியாஸ் அவர்களும் கலந்துகொண்டு திருக்குறளில் வாழ்வியல் என்கிற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா பிரைட் புக் ஆப் ரெகார்ட்ஸ் ஆகியவற்றின் நிறுவநர் முனைவர் ஆர்.ராஜேந்திரன் அவர்கள் உலக சாதனை சான்றிதழை வழங்கி விழாக் குழுவினரைப் பாராட்டிப் பேசினார்.