அனுமதியின்றி ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முற்பட்ட 17,615 பேரைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகப் பொது பாதுகாப்பு ஆணையரும், ஹஜ் பாதுகாப்பு குழுவின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அல் பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். தொழிலாளர், குடியிருப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 9,509 பேரும் இதில் அடங்குவர்.
மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 105 போலி ஹஜ் குழுக்களைக் கண்டறிந்து சம்பந்தபட்டவர்கள் கைதும் செய்யப்பட்டு பொது வழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஹஜ் அனுமதிப் பத்திரம் இல்லாத மொத்தம் 202,695 நபர்கள் மக்கா நுழைவுப் புள்ளிகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக அல்-பஸ்ஸாமி கூறினார். மக்கா மற்றும் புனிதத் தலங்களுக்குள் நுழைய உரிமம் பெறாத மொத்தம் 128,999 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
ஹஜ் அனுமதி பெறாத யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற 33 பேர் ஜூன் 30 வெள்ளிக்கிழமை வரை கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிரான விதிமுறைகளை அமல்படுத்த மக்கா புறப்பகுதியில் உள்ள பாஸ்போர்ட் பொது இயக்குநரகத்தின் கீழ் உள்ள நிர்வாகக் குழுக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஹஜ் பாதுகாப்புப் படைகள் ஹஜ் தொடர்பான பாதுகாப்பு மற்றும் நிறுவனத் திட்டங்களை உயர் செயல்திறன் மற்றும் தொழில்முறையுடன் செயல்படுத்தியதை அல்-பஸ்ஸாமி குறிப்பிட்டார்.