அபாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், இரண்டாவது முறையாக ஆம்பெடமைன் வகை போதை மாத்திரைகளை விற்பனை செய்ய ஊக்குவித்த சவூதி குடிமகனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட 25 சைக்கோட்ரோபிக் ஆம்பெடமைன் மாத்திரைகளை ஊக்குவித்ததற்காகவும், கடத்தல் நோக்கத்திற்காக மாத்திரைகளை வைத்திருந்ததற்காகவும் குடிமகனைச் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மூலத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர் மறைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிமகனுக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், தண்டனைக் காலம் முடிந்த பின் அந்நபர் சவூதி விட்டு வெளியே பயணம் செய்ய 25 ஆண்டுகளுக்கு நீதிமன்றம் தடையும் விதித்துள்ளது. மேலும் ரியால் 150,000 அபராதம் விதித்துள்ளது.அபராத பணத்தை மாநில பொது கருவூலத்தில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது அலைபேசி மற்றும் கடத்தலுக்காக அவர் பயன்படுத்திய கார் ஆகியவற்றை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது.