சவூதிமயமாக்கல் தேவையை நீக்குவது நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வழங்கப்படும் சலுகைகளில் ஒன்றாகும் என மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது அல்-ராஜி, கூறியுள்ளார். முதலீட்டாளர்களுக்குப் போட்டித்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஊக்கங்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவித்தார்.
பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்பவர்கள், சவூதியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினால், மனித வள மேம்பாட்டு நிதியத்தில் (HADAF) ஊக்கத்தொகையைப் பெறுவார்கள் என்று, திங்களன்று சவூதியின் சிறப்புப் பொருளாதார மண்டல முதலீட்டு மன்றத்தில் உரையாற்றிய அல்-ராஜி, கூறினார்.
இந்த அறிவிப்பு, சில தொழில்களில் உள்ள சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவும், அதே போல் நாட்டிற்கு செல்ல விரும்பும் நிறுவனங்களையும் ஈர்க்கும். முதலீட்டாளர்களின் பார்வையில் ஊக்கத்தொகைகள் போட்டித்தன்மையுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்ய, உலகளாவிய மற்றும் நாட்டின் தரங்களை ஆய்வு செய்த பின், ஊக்கத்தொகைகளை வடிவமைத்துள்ளோம் என்று அமைச்சர் கூறினார்.
அடிப்படை பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சவூதிமயமாக்கல் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான உரிமத்தை திங்கள்கிழமை அன்று சவூதி அரேபியா வழங்கியுள்ளது. அவை ரியாத், ஜசான், ராஸ் அல்-கைர் மற்றும் ஜித்தாவின் வடக்கே கிங் அப்துல்லா பொருளாதார நகரத்தில் அமைந்துள்ளது.