அரசின் முன் முயற்சியான “கிரீன் ரியாத்” திட்டம் அல்-நகீல் சுற்றுப்புறத்தில் அதன் பசுமைப்படுத்தல் முயற்சிகளை அதிகாரப்பூர்வமாகத் துவக்கியுள்ளது, இது அல்-அஜிசியா, அல்-நசீம், அல்-ஜசீரா, அல்-அரைஜா, குர்துபா மற்றும் அல்-காதிர் ஆகியவற்றின் வெற்றிகரமான பசுமைப்படுத்தலுக்குப் பிறகு ரியாத்தின் ஏழாவது குடியிருப்புப் பகுதியாக மாறியுள்ளது.
வியாழன் அன்று தொடங்கி அல்-நகீலில் பசுமையாக்கும் திட்டம் 50,000 மரங்கள் மற்றும் புதர்களைக் கொண்ட பசுமையான நிலப்பரப்பை அறிமுகப்படுத்தி மேலும் இத்திட்டத்தில் 17 சுற்றுப்புற பூங்காக்கள், நான்கு பள்ளிகள், 30 மசூதிகள், 14 வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் 52 கிலோமீட்டர் தெருக்கள் மற்றும் தாழ்வாரங்கள் ஆகியவை அடங்கும்.
சமூகம் இந்தப் பசுமை மாற்றத்திற்கு உள்ளாகும்போது, அல்-நகீல் பகுதியில் கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் அக்டோபர் 5 முதல் தொடங்கி அக்டோபர் 14 வரை நடத்தப்பட்டு குடியிருப்பாளர்களுக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்ட நிலைகள், கால அளவு மற்றும் முடிந்த பின் திட்டமிடப்பட்ட வடிவமைப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.
ரியாத்தில் உள்ள நான்கு முக்கிய திட்டங்களில் ஒன்றான பசுமை ரியாத் திட்டம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் அவர்களால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரியாத்தில் 7.5 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுதல், நகரின் பசுமைப் பரப்பை 9.1% ஆக அதிகரிப்பது, பசுமையான இடங்களின் தனிநபர் பங்கை 1.7 மீ 2 முதல் 28 மீ 2 ஆக உயர்த்துவது (16 மடங்கு அதிகரிப்பு) மற்றும் பசுமையாக்குவதன் மூலம் நகர்ப்புற சூழலை மேம்படுத்துவது ஆகியவை திட்டத்தின் நோக்கங்களில் அடங்கும்.
மேலும் இந்த முன்முயற்சியில் வரும் பத்தாண்டுகளில் சவூதிக்குள் 10 பில்லியன் மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.